13 அக்., 2011

TwiTamils.com உடன் இணைந்திடுங்கள்


அன்பு நண்பர்களே,

          தங்களின் மேலான ஆதரவினால் TwiTamils.com தளத்தினை துவங்கி நடத்தி வருகிறோம், ட்விட்டர் குறித்த பதிவுகளும் , கீச்சர்களை அறிமுகம் செய்தும் , வலைபாயுதே கீச்சுகளை தொகுத்தும், ட்விட்டர் பட்டிகளின் அடிப்படையில் கீச்சுகளை தேடித் தொகுத்தும் வருகிறோம். இன்னும் மேலும் பல புதிய பகுதிகளை தளத்தில் இணைக்க உள்ளோம். தமிழ் கீச்சர்களுக்கான ஒரு முழுமையான தளமாக TwiTamils.com தனை மேம்படுத்த முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலரின் பங்களிப்பாக இவை இல்லாமல், உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இதில் வேண்டும். ஏனெனில் இது தமிழ் கீச்சர்கள் நாம் அனைவருக்குமான தளம். தளத்தில் நீங்களும் ஒரு பதிவராக இணையலாம். அதற்கான வாய்ப்புகளைப் பற்றியே இந்த பதிவு!

     1. பதிவுகள் : ட்விட்டர் கருவிகள் , வசதிகள் , பயன்படுத்தும் முறைகள் குறித்த பதிவுகளை தமிழில் எழுதலாம். ட்விட்டர் குறித்த தகவல்கள் இணையத்தில் கடலென கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை எளிய தமிழில் இலகுவாக புரிந்திடும் வகையில் தருவது நம் நோக்கம். ஒரு இணைய தளத்தில் உள்ள பதிவை அப்படியே தமிழ் படுத்தக் கூடாது, மேலும் அது குறித்து நிறைய தேடி வாசித்து , அவற்றை சோதித்துப் பார்த்த பின் உங்களது நடையில் எழுத வேண்டும்.

2. ட்விட்டர் பட்டிகள் : நம் தளத்தில் #FamousLies #140Story  .. போன்ற ட்விட்டர் பட்டிகளைக் கொண்டு வெளியிடப்பட்ட கீச்சுகளைத் தேடித் தொகுத்து வெளியிட்டு இருக்கிறோம். அது போல் தமிழ் கீச்சர்கள் எழுதும் பட்டிகளைத் தொகுத்து தரலாம்.

3. கீச்சர் விருப்பம்: புதிய பகுதியாக இணைக்க உள்ளோம். நல்ல கீச்சுகளை தேடித் தொகுத்து தருவதும், கீச்சுத் தேர்வு ஒருவரின் விருப்பமாக இல்லாமல் ஒவ்வோரின் விருப்பமாகவும் இருக்க வேண்டும் என்பதும், பல புதியவர்களின் நல்ல கீச்சுகளை நம் தளத்தின் வழியாக பரவச் செய்வதும் நோக்கம். மிக குறைவானவர்களையே நீங்கள் பின்பற்றினால் உங்கள் கவனத்திற்கு வராத அருமையான கீச்சுகளாக இருக்கும். நீங்கள் அதிகம் ரசித்த கீச்சுகளை இதன் மூலம் பகிரலாம். ஒரு பதிவிற்கு இருபது கீச்சுகள் வீதம் எத்தனை பதிவுகள் வேண்டுமானாலும் இடலாம். யாரையும் புண்படுத்தாத கீச்சுகள் மட்டுமே அனுமதிக்கப்படும். கீச்சுகளை வாசித்து ஏற்றுக் கொள்ளக் கூடியவற்றையே தேர்ந்தெடுப்போம். ஆங்கில கீச்சுகளுக்கு அனுமதி இல்லை. உங்களுடைய கீச்சை நீங்களே இணைக்க இயலாது. ஒருவரின் ஒரு கீச்சுக்கு மேல் இதில் இணைக்க இயலாது, அடுத்த பதிவில் இணைத்துக் கொள்ளலாம்.

4. கீச்சர்அறிமுகம்  : பல புதிய கீச்சர்கள் மிக அழகாக கீச்சுகிறார்கள். அவர்களை நம் தளத்தின் மூலமாக பலருக்கும் அறிமுகப்படுத்தி, புகழ்ப்படுத்தும் முயற்சி இது. நீங்கள் அதிகம் ரசித்த கீச்சரை இதன் மூலம் அறிமுகப்படுத்தலாம். அவரின் கீச்சுகளில் இருந்து சிறந்த முப்பது கீச்சுகளைத் தேடி, அவரின் பெயர், இடம், சுயவிவரம், வலைப்பூ, தமிழ் ட்விட்டர் குறித்த அவர் கருத்தும் பெற வேண்டும். எடுத்துக்காட்டுகள் @balu_sv , @SoniaArun

5. கீச்சர்பதிவுகள் : நம் தமிழ் கீச்சர்களின் வலைப்பதிவுகளை குறும்படங்களை பிரபலப்படுத்தும் முயற்சி இது. நீங்கள் வாசித்து ரசித்த , தமிழ் கீச்சரின் சிறந்த பதிவொன்றை , குறும்படத்தினை பரிந்துரைக்கலாம். வாரத்திற்கு ஒன்றாக வலையேற்றுவோம். இதில் தேர்வு செய்வது தமிழ் கீச்சர்களின் வலைப்பூக்களில் இருந்து மட்டுமே இருக்கும். நகைச்சுவை , கதைகள், சமூக வலைத்தளம் குறித்த பதிவாக இருந்தால் மிக நலம்.

தமிழில் ஐந்தாயிரத்திற்க்கும் மேற்பட்ட பதிவர்கள் இருந்தாலும் அதில் வெகு சிலரே ட்விட்டரில் இருக்கிறார்கள். இணையத்தில் இயங்கும் தமிழர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்திடும் கருவியாக ட்விட்டரை மாற்றுவதே நம் நோக்கம். அதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம். WordPress, Twitter , pulveli.com , Libre Office, என தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதற்கான பல தேவைகள் உள்ளன. அது குறித்து விரிவாக எழுதுகிறேன். அவற்றிலும் நம் பங்களிப்பு தேவை.

மேலதிகமாக நமது தளத்தில் உங்கள் ட்விட்டர் கணக்கின் மூலம் நுழைந்து(SignIn) பின்னூட்டங்களை(comments) இட முடியும். மேலும் நீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவின் கீழும், Tweet Buttonல் உங்களது ட்விட்டர் பெயர் இணைக்கப் பட்டிருக்கும். அதன் கீழ் உங்களது வலைப்பூ அல்லது தளத்தின் முகவரியும் கொடுக்கலாம். உங்களது பதிவு ட்விட்டரில் பகிரபட்டால் உங்களுக்கு @mention மூலம் தெரிந்து விடும். நம் தளத்தின் மூலமாக உங்களுக்கு பயன் கிடைப்பது உறுதி.

வலைபாயுதே பகுதி விகடனின் தேர்வு ஆதலால் அதைத் தவிர மற்ற அனைத்து பதிவுகளிலும் பயனுள்ள, நகைச்சுவையான, கருத்துச் செறிவுள்ள, தனி மனித விமர்சனங்கள் அற்ற, தவறான வார்த்தைகள் இல்லாத, அரசியல் கட்சிகள் பற்றி அல்லாத, யாரையும் புண்படுத்தாத கீச்சுகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.


Twitamils தளத்தில் பங்காற்ற விரும்பினால் @karaiyaan @vedhaLam தொடர்பு கொள்ளலாம்.

2 கருத்துகள்:

S.Dhandapani சொன்னது…

மிகவும் நல்ல முயற்சி. இபபடி ஒரு ஒருங்கிணைப்பு இருந்தால் நல்லது என்று நான் நினைத்து வந்தேன்.ஆகவே இந்த முயற்சி வெற்றியடைய என் வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

ட்விட்டரில் தமிழுக்காகவும், தமிழ் உள்ளங்களை ஒன்றிணைக்க உங்களின் முயற்சிக்கும் மிகுந்த பாராட்டுக்கள். @stivel